அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட கருணாநிதி செம்மொழி விருது வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட கருணாநிதி செம்மொழி விருது வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-03-04 01:16 GMT
சென்னை, 

தந்தை பெரியார் திராவிடர் இயக்கத்தின் துணை தலைவரும், வக்கீலுமான எஸ்.துரைசாமி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழ் மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து வழங்கியது. இதை தொடர்ந்து, சென்னையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நிறுவப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, அந்த நிறுவனத்துக்கு தன் சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடியை வழங்கினார். அந்த நிதியின் மூலம் தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்கினார். 2010-ம் ஆண்டு வரை இந்த விருது வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த விருது வழங்குவதை நிறுத்திவிட்டனர். எனவே, இந்த விருதை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, விருது வழங்குவது என்பது அரசியல் தொடர்பான முடிவாக உள்ளதால், உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்