முதலாம் ஆண்டு நினைவு தினம்: க.அன்பழகன் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவருடைய உருவப்படத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-03-07 21:06 GMT
சென்னை,

மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள க.அன்பழகனின் வீட்டுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் சென்றார். அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த க.அன்பழகனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

கொள்கை உணர்வை ஊட்டியவர்

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

திராவிடக் கருத்தியல் பாதையில் நம்மை வழிநடத்தும் இனமானப் பேராசிரியரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல். இளம்பருவத்தில் தன் நெஞ்சில் ஏந்திய திராவிடக் கொள்கையை முதுமையிலும் வைரம் பாய்ந்த மரம் போல உறுதியாகப் பற்றி நின்று, தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை காப்பது ஒன்றே தன் கடமை எனக் கருதி, கட்சியில் தன்னைவிட இளையோர் அனைவருக்கும் திராவிட வகுப்பெடுத்துக் கொள்கை உணர்வினை ஊட்டியவர் நம் க.அன்பழகன். குடும்பப் பாசம் மிகுந்த இயக்கமான தி.மு.க.வில் கருணாநிதியிடம் எந்தளவுக்கு இயக்கப் பயிற்சி பெற்றேனோ அதே அளவுக்கு, ‘பெரியப்பா’ க.அன்பழகனிடமும் பயிற்சியினைப் பெற்றேன்.

பாடுபட உறுதி ஏற்போம்

அந்தப் பயிற்சிதான் இன்று தி.மு.க. எனும் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும் பொறுப்பைச் சுமந்து பயணிப்பதற்கு உரமாகவும், ஊக்கமாகவும் இருக்கிறது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவராக, பேரறிஞர் அண்ணாவின் இதயம் நிறைந்த அன்புத் தம்பியாக, கருணாநிதிக்குத் தோள் கொடுத்து நின்ற கொள்கைத் தோழராக, இயக்கக் கருத்தியலின் தலைவராகத் தன் வாழ்நாள் முழுவதும் திராவிடம் பரப்பிய, பாடுபட்ட க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவர் கற்றுத் தந்த தத்துவப் பாடங்களை நெஞ்சில் ஏந்தி, மதவாத, பிற்போக்கு, அடிமை சக்திகளை முறியடித்து, மதநல்லிணக்க, சுயமரியாதைமிக்க, சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு அயராது பாடுபட உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ அஞ்சலி

இதேபோல க.அன்பழகன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஆட்சிமன்றக்குழு செயலாளர் டி.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் ஜ.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, தேர்தல் பணிச் செயலாளர்கள் ஆவடி ரா.அந்திரிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்