எழுத்தாளர் இமையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் இமையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-12 16:29 GMT
சென்னை,

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கிய உலகில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் இந்த சாகித்ய அகாடமி விருது, கடந்த 1955 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவர்களுக்கு தாமிர பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்திற்கு விருது வழங்கப்படுகிறது. செல்லாத பணம் என்ற நாவலுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. 

‘கோவேறு கழுதைகள்’ என்ற தனது முதல் நாவல் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர் எழுத்தாளர் இமையம். இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை ஆகும். இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கழுதூரில் பிறந்தவர் ஆவார். 

இந்நிலையில் சாகித்ய அகாடமி விருது பெற இருக்கும் எழுத்தாளர் இமையத்திற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எழுத்தாளர் இமையத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “எளிய மக்களின் வாழ்வியலைத் தனது எழுத்துகளால் அழகியலோடு வெளிப்படுத்தும் திராவிட இயக்கப் படைப்பாளர் இமையத்தின் ‘செல்லாத பணம்’ புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கொள்கை சார்ந்த பயணத்துடனான அவரது படைப்புகள் மென்மேலும் பல விருதுகளைப் பெற்றிட வாழ்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்