தடைகளை தகர்த்து விமானப்படையில் அதிகாரியாக பதவியேற்ற நெல்லை இளம்பெண் ஆர்.பொன்ஷர்மினி

ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் ஆர்.பொன்ஷர்மினி விமானப்படை பிளையிங் ஆபீசராக பதவியேற்றார்.;

Update:2025-12-13 18:17 IST

சென்னை,

பொருளாதார ரீதியாக சவாலான பின்னணியை உடைய, லட்சியம் நிறைந்த தமிழ்ப் பெண், இன்று (13 டிசம்பர் 2025) இந்திய விமானப்படையில் பிளையிங் அதிகாரியாக இணைந்துள்ளார். இது தொர்பாக இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பிளையிங் ஆபீசர் ஆர்.பொன்ஷர்மினியின் பயணமானது விடாமுயற்சி, மன உறுதி மற்றும் அசைக்க முடியாத கனவுகளை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்த இவர், ஒரு எளிய குடும்பத்தை சார்ந்தவர். அவரது பெற்றோர் இருவரும் தையல்காரர்களாக அயராது உழைத்தனர். அவர்களின் தியாகங்கள், சிறு வயதிலிருந்தே கடின உழைப்பு மற்றும் உறுதியான மனப்பான்மை போன்ற நற்பண்புகளை அவளுக்குள் விதைத்தன.

பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஒரு சுறுசுறுப்பான தடகள வீராங்கனையாகவும் என்.சி.சி. மாணவியாகவும் இருந்த பொன்ஷர்மினி, ஆரம்பத்தில் ஒரு விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் என்று கனவு கண்டார். இருப்பினும், நிதி நெருக்கடிகள் அந்த கனவை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரை உதவித்தொகைகளைப் பெற்று, கல்வியில் கவனம் செலுத்தும்படி தூண்டின. அவர் தனது குடும்பத்தின் சுமையை குறைப்பதற்காக, குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பது முதல் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றுவது வரை பகுதி நேர வேலைகளையும் செய்தார்.

பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஓய்வுபெற்ற சில முப்படை அதிகாரிகளின் கீழ் பணியாற்றினார். அவர்களின் கதைகள், பாதுகாப்புப்படை சீருடை அணிய வேண்டும் என்ற அவரது குழந்தைப் பருவக் கனவை மீண்டும் தூண்டின. பொன்ஷர்மினி கடினமாக உழைத்தார், அவரது விடாமுயற்சி இறுதியாக அவரை போட்டித்தேர்வில் வெற்றிபெற வைத்து இந்திய விமானப்படையில் இப்போது ஒரு அங்கமாக்கியுள்ளது.

அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகியவை, தெலுங்கானாவின் துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியின் 2025 ஆம் ஆண்டுக்கான இலையுதிர்காலப் பருவ (Autumn Term) மகளிர் கேடட் கேப்டனாக (WCC) நியமிக்கப்பட வழிவகுத்தது. 13 டிசம்பர் 2025 அன்று, ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் அவர் அதிகாரியாக பதவியேற்றபோது, ​​ஒரு அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறியது.

பிளையிங் ஆபீசர் ஆர்.பொன்ஷர்மினியின் கதை, முப்படைகளில் சேர வேண்டும் என்ற லட்சியம் கொண்ட பல இளைஞர்களுக்கு, அவர்கள் எந்த பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்