தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் மூடப்படும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் உறுதி

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் மூடப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

Update: 2021-03-31 22:08 GMT
ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பா.ஜனதா கட்சி வேட்பாளர் நாகேஷ்குமார், ஓசூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி ஆகியோரை ஆதரித்து டி.தம்மண்டரப்பள்ளியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்காக உழைத்தவர் ஜெயலலிதா. தேசிய சிந்தனை கொண்ட தைரியமான பெண்மணி அவர். தேசிய சிந்தனை கொண்ட கட்சி பா.ஜனதா. இயற்கையாகவே அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் தேசிய சிந்தனை நீரோட்டத்தில் கலந்து தற்போது தேர்தலில் களம் காண்கிறது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா வழியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

மதுக்கடைகள் மூடப்படும்

காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி, 3ஜி ஊழல் இருந்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் எந்த ஊழலும் கிடையாது. இனியும் நடக்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இடைத் தரகர்களிடம் பணம் பெற்று தான் அரசில் வேலை நடந்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு இடைத்தரகர்களை வீட்டுக்கு அனுப்பி ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி சிறப்பான ஒரு ஆட்சியை மோடி வழங்கி கொண்டிருக்கிறார். மதுவால் மிகப்பெரிய சீரழிவு சமுதாயத்தில் நடக்கிறது. பலர் அதற்கு அடிமையாகி சீரழிகிறார்கள். தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில், அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல ஊட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து ராஜ்நாத் சிங் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.

மேலும் செய்திகள்