சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

Update: 2021-04-06 23:24 GMT
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த தொகுதிக்கு வந்து தனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.இந்தநிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்த அவர் தேர்தலையொட்டி நேற்று ஓட்டுப்போடுவதற்காக சேலத்தில் இருந்து தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் காலை 10.45 மணிக்கு சிலுவம்பாளையத்தில் 
அவரது வீடு அருகில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தார்.

வாக்களித்தார்
இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் சக வாக்காளர்களுடன் நீண்ட வரிசையில் நின்றார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து 10.50 மணிக்கு வாக்குச்சாவடி 172-ல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.

மேலும் செய்திகள்