சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் 4 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 4 அமைச்சர்கள் திடீரென சந்தித்து பேசினர்.

Update: 2021-04-09 03:57 GMT
சேலம், 

சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 6-ந்தேதி ஓட்டுப்போடுவதற்காக தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்துவிட்டு சேலம் திரும்பிய முதல்-அமைச்சர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்தநிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி ஆகியோர் சந்தித்து பேசினர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து சிறிது நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர்

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜா மற்றும் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அருள் ஆகியோரும் முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அதேசமயம் நேற்று முன்தினம் மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலத்துக்கு வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.

இதனிடையே, தேனியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் இறந்துவிட்டார். இதனால் துக்கம் விசாரிக்க இன்று (வெள்ளிக்கிழமை) சேலத்தில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேனிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்