கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது என்று சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2021-04-09 23:51 GMT
சேலம்,

நாடு முழுவதும் கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. அதன்படி கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 தடுப்பூசிகளை பொதுமக்கள் போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. முதல் கட்டமாக தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி சென்னையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் தற்போது சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 386. இதில் குணம் அடைந்தவர்கள் 5 லட்சத்து 72 ஆயிரத்து 415. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 30 ஆயிரத்து 131 பேர். இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 840. இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 69 பரிசோதனை நிலையங்கள், தனியார் சார்பில் 191 நிலையங்கள் என மொத்தம் 260 கொரோனா பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் தினமும் 85 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 54 லட்சத்து 85 ஆயிரத்து 820 தடுப்பூசி டோஸ்கள் வரப்பெற்று உள்ளன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி 47 லட்சத்து 3 ஆயிரத்து 590 தமிழகத்துக்கு வந்துள்ளது. அதே போன்று கோவேக்சின் 7 லட்சத்து 82 ஆயிரத்து 130 வரப்பெற்று உள்ளது. சேலத்திற்கு 2 லட்சத்து 78 ஆயிரத்து 200 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

இன்று (சனிக்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு விலையில்லாமல் முககவசம் வழங்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் உள்ளதே என்று கேட்டனர். அதற்கு அவர், அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது. நோய் தொற்று அதிகரிக்கும் போது மருத்துவ நிபுணர்களிடம் கருத்து கேட்டு அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்