பசுமை தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்க தடை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2021-04-10 00:44 GMT

அதில் , “தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதனை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது. குறைந்தது 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றியவர்களைத்தான் இந்த பதவிக்கு நியமனம் செய்யமுடியும். ஆனால் அவர் 3 ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றியுள்ளார். எனவே, அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மத்திய அரசும், கிரிஜா வைத்தியநாதனும் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். 

இந்தநிலையில், நேற்று விசாரணைக்குக்கு பின்பு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கிரிஜா வைத்தியநாதன், நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க தகுதியினை பெறவில்லை என்ற மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. அவர் சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் சுமார் 3½ ஆண்டுகள் மட்டுமே பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். எனவே, இந்த பதவியை பெற தனக்கு முழு தகுதி உள்ளது என்பதை கிரிஜா வைத்தியநாதன் தான் நிரூபிக்க வேண்டும்.

அதேநேரம், வருகிற 19-ந் தேதி கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்க உள்ளதாக அவர் சார்பில் கூறப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

மேலும் செய்திகள்