கொரோனாவின் 2-வது அலையை தடுக்க முக கவசம் அணிவதே தீர்வு - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்த முககவசம் அணிவதே இப்போதைய தீர்வு என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

Update: 2021-04-12 05:31 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. இதனால், நாளொன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க காரணம் அனைவரும் முக கவசம் அணியாமல் இருப்பது தான். இதன் விளைவாக தான் தற்போது கொரோனா உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தலைகவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் உயிரை காப்பாற்றி கொள்ள முக கவசமும் முக்கியம். இப்போதைக்கு முக கவசம் மட்டுமே சிறந்த தீர்வு.

முக கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அனைத்து கடை வியாபாரிகளும் அறிவிக்க வேண்டும். முக கவசம் என்பது வாய், மூக்குப்பதியை முழுமையாக மூடும் வகையில் இருக்கும். ஆனால் நம்மில் பலர் அந்த முக கவசத்தை வாய்ப்பகுதியை மட்டுமே மூடுகின்றனர். 

இதுபோல் சரிவர முக கவசம் அணியாமல் இருந்தாலும் கொரோனா உடனடியாக தாக்கும். அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் மக்கள் அதனை சரிவர பயன்படுத்தினால் தான் நல்லது. கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் மிகுந்த கவனத்துடன் கொரோனாவை கையாள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்