தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-14 13:02 GMT
சென்னை,

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே இதுவரை பதிவான தினசரி பாதிப்பில் அதிக எண்ணிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97,668 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,54,948 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறௌ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,87,663 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,464 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 25 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,970 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது 54,315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்