நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-16 02:53 GMT
சென்னை,

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, கேரளா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை (சனிக்கிழமை) தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 18 (நாளை மறுதினம்), 19 (திங்கட்கிழமை) -ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்