சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2021-04-19 15:15 GMT
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ந் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. அதன்படி 20-ந் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் நிமிடத்திற்கு ஒரு ரயில் இயங்கும் என்றும், நெரிசல் குறைவாக உள்ள இடங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்