தமிழகம் முழுவதும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பஞ்சாயத்து யூனியன் அளவில் குழுவை அமைத்து, தமிழகம் முழுவதும் உள்ள கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-20 00:05 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் ஆரணியைச் சேர்ந்த குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாலாற்றிலிருந்து தண்ணீர் வருகிறது. இந்த பாசனநீர், கால்வாய் வழியாக கயப்பாக்கம் ஏரியில் நிரம்புகிறது. இந்த ஏரி அப்பகுதி விவசாயத்துக்கு நீராதாரமாக உள்ளது.

ஆனால் இந்தக் கால்வாயின் இருபுறமும் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளச்சேதம் ஏற்பட்டது. கால்வாய் சரியாக இருந்திருந்தால் மழைநீர் தேவையில்லாமல் கடலில் கலந்திருக்காது.

எனவே, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை எடுத்தார். அதையடுத்து நானும், மேலும் 18 பேரும் எங்கள் நிலம் உள்ள பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை திருப்பித்தர சம்மதித்து கலெக்டர் மற்றும் ஆரணி தாசில்தாரிடம் கடிதம் எழுதிக்கொடுத்தோம். ஆனால் சிவா என்பவர் மட்டும் அதற்குச் சம்மதிக்கவில்லை. எனவே, கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:-

கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை ஒப்படைக்க சிவா என்பவர் தவிர மற்ற பாசன விவசாயிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் அறுவடை தொடங்க உள்ளது. எனவே, கால்வாய் ஆக்கிரமிப்புகளை மனுதாரர் உள்ளிட்ட 19 பேரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

கால்வாய்களில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு, மனுதாரர் குறிப்பிடும் கிராமத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ளது.

எனவே, பொதுப்பணித்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இயக்குனர் ஆகியோரை இந்த வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம்.

ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கிவிட்டால் ஒழுங்கான முறையில் விவசாயம் செய்ய முடியாது. பல கால்வாய்கள் முழுவதுமாக பக்கத்து நில உரிமையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வரத்து தடைப்படுகிறது.

எனவே, கால்வாய்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட வேண்டும்.

இதற்காக தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும், பஞ்சாயத்து யூனியன் அளவில் குழு அமைக்க வேண்டும். அந்த குழு, கால்வாய்களை ஆய்வு செய்து வருவாய் ஆவணங்களில் உள்ள அளவின்படி, கால்வாய்களை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்