தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி டிஸ்சார்ஜ்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Update: 2021-04-20 03:11 GMT
கோப்புப்படம்
சென்னை, 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு குடலிறக்கம் (ஹெர்னியா) பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

ஆனால், அப்போது தமிழக சட்டப்பேரவைத் தோதல் பிரசாரம் தொடங்கியிருந்ததால், அவா் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொள்ளவில்லை. தற்போது வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், குடலிறக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் முதலைமைச்சர் பழனிசாமி நேற்று அனுமதிக்கப்பட்டார். 

முன்னதாக முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்பது தெரியவந்தது. அதன் பின்னா் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சரின் உடல் நிலை சீராக இருந்ததால், அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். மேலும் முதலமைச்சர் பழனிசாமி மூன்று நாட்கள் வீட்டில் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு அவர் முழு ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்