கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி

கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-20 20:14 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ‘பவளப்பாறைகள் மற்றும் மீன்குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் சுருக்குமடி வலை கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்து கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் சுருக்குமடி வலையைக் கொண்டு மீன் பிடிக்கலாம் என கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அதனால், கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் சுருக்குமடி வலையைக் கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அதிகாரம் உள்ளது

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உறுதி செய்துள்ளது என்று கூறினார். அதையடுத்து நீதிபதிகள், ‘சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக முடிவுசெய்து அரசு தடை விதித்துள்ளது. பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எவரும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதில்லை என்ற அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். மீனவர்கள் நலன் கருதி மீன்பிடி தொழிலை முறைப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்