கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகளை தனியார் ஆஸ்பத்திரிகள் ஒதுக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

தனியார் ஆஸ்பத்திரிகள் 50 சதவீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-20 20:58 GMT
சென்னை, 

தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் தங்களது மொத்த படுக்கை வசதிகளில் 50 சதவீதத்தை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை நிறுவனச் சட்டம் மாநில அதிகாரி மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரிகளுக்கு வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தங்களிடம் உள்ள மொத்த படுக்கைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்.

தினசரி அறிக்கை

அதேநேரத்தில், அவசரம் இல்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு உள்நோயாளிகளாக அனுமதிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், படுக்கை வசதிகள் குறித்து தினசரி அறிக்கையை அந்ததந்த மாவட்டத்தில் உள்ள இணை சுகாதாரத் துறை இயக்குநரகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்திலோ தெரிவிக்க வேண்டும்.

மேலும்https://stopcorona.tn.gov.in/என்ற இணையப் பக்கத்திலும் தேவையான தகவல்களை அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும் தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும். கொரோனா சிகிச்சைகள் குறித்து தனியார் மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட இணை சுகாதாரத் துறை இயக்குநர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்