விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு வெறும் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ரெயில் கொரோனா அச்சம் காரணம்

கொரோனா அச்சம் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வெறும் 30 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது.

Update: 2021-04-21 21:53 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிற்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம்- புருலியா இடையே ஏப்ரல் 21-ந் தேதி முதல் வாரந்தோறும் புதன், சனிக்கிழமை வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்தது. அதன்படி நேற்று பகல் 12 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புருலியாவிற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் 12 பெட்டிகளுடன் புறப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் நோய் தாக்கத்தின் அச்சம் காரணமாக பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

30 பயணிகளே பயணம்

இந்த ரெயிலில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 30 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் விழுப்புரம்- புருலியா இடையே ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அந்த சமயத்தில் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிற நிலையில் ரெயில் போக்குவரத்தை தொடங்கியுள்ளதால் எந்தவித பயனும் இல்லை. கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலானோர் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்’ என்றனர்.

மேலும் செய்திகள்