தலைமைச் செயலக வளாகத்தில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 ;எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-04-22 08:45 GMT
சென்னை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 11,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,25,059 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 84,361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு முதல் தொடங்கி அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், அதேபோன்று பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்