தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை என்ன? பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் விளக்கம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நடத்திய அனைத்து முதல்-அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் பங்கேற்று இங்குள்ள தொற்றின் நிலை பற்றி விளக்கம் அளித்தார்.

Update: 2021-04-23 23:06 GMT
சென்னை, 

தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் படுவேகம் எடுத்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

மேலும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் உரை

பல மாநிலங்களில் இதே நிலை நீடிப்பது, இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆலோசித்து அதற்கேற்ற அறிவுரைகளை வழங்க பிரதமர் முடிவு செய்தார்.

அந்த வகையில் நேற்று காலை 10 மணியளவில், கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றார். கொரோனா தொற்றின் நிலை மற்றும் பரவல் தடுப்பிற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளருடன் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

அதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தையும், பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆலோசனைகளையும் முதல்-அமைச்சரிடம் ராஜீவ் ரஞ்சன் எடுத்து கூறினார். 

மேலும் செய்திகள்