தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தியாகும் தமிழகத்திற்கான ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-04-26 02:03 GMT
சென்னை,

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதாலும், தமிழகத்திற்கு மருத்துவ ரீதியான ஆக்சிஜன் தேவையின் அளவு அதிகம் உள்ளது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் 450 டன் ஆக்சிஜன் உடனடியாக தேவைப்படுகிறது. தமிழகத்தின் ஆக்சிஜன் தயாரிப்பு கொள்ளளவு 400 டன் தான்.

ஆந்திரா, தெலுங்கானாவுக்கு திருப்பிவிடப்பட்டது

கடந்த ஆண்டு அதிகபட்சமாக தொற்று எண்ணிக்கை 58 ஆயிரமாக இருந்தது. தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. எனவே, தற்போது ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் வழங்குவதில் எந்தவொரு இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் அளவு 220 டன் என்று சமீபத்தில் தேசிய மருத்துவ ஆக்சிஜன் அமைப்பு ஒதுக்கியுள்ளது. இது தவறான ஒதுக்கீடாகும். இதன் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பில் இருந்து 80 டன் திரவ ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு திருப்பி விட்டு விட்டனர்.

நியாயமாக தெரியவில்லை

தமிழகத்திற்கு தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு அங்குள்ள ஆக்சிஜன் தயாரிப்பு கொள்ளளவைவிட குறைவாக இருப்பதாக தவறாக கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால், பெட்ரோலிய மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்புகளின் தரவின் படி, தமிழகத்தின் நுகரப்படும் ஆக்சிஜனின் அளவு, ஏற்கனவே 310 மெட்ரிக் டன்னை எட்டிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, 220 டன் என்பது போதுமானதாக இல்லை.

மேலும், எந்த மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ, அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. எனவே, அதிக கொரோனா எண்ணிக்கை உள்ள சென்னை நகரத்துக்கு ஆக்சிஜன் சப்ளை செய்துவந்த, ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து வேறு இடத்திற்கு திருப்பிவிடப்பட்டது நியாயமாக தெரியவில்லை. எனவே, இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

ரத்து செய்ய வேண்டும்

தமிழகத்தை பொறுத்தவரையில், மற்ற மாநிலங்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் உள்ளது. என்றாலும், திரவ ஆக்சிஜன் தற்போது இங்கு தேவை இருக்கும்போது, அதை திருப்பிவிடுவது என்பது சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

எனவே, ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 கிலோ லிட்டர் ஆக்சிஜனை திருப்பிவிட்டதை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்