18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவச கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியது. ஒரே நேரத்தில் பலர் ஆர்வம் காட்டியதால் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

Update: 2021-04-29 05:09 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்படுகிறது. ஏற்கனவே முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படிப்படியாக ஒவ்வொரு பிரிவிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 295 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்துள்ளது. இதில் 7 லட்சத்து 45 ஆயிரத்து 664 சுகாதாரப்பணியாளர்களுக்கும், 8 லட்சத்து 5 ஆயிரத்து 54 முன்கள பணியாளர்களுக்கும், 45 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 20 லட்சத்து 71 ஆயிரத்து 57 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 29 ஆயிரத்து 969 பேருக்கும் என மொத்தம் 55 லட்சத்து 51 ஆயிரத்து 744 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இணையதளத்தில் முன்பதிவு

இந்தநிலையில் மே 1-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக http://www.cowin.gov.in என்ற இணையதளத்திலும், ஆரோக்கிய சேது உள்ளிட்ட செயலியிலும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணி முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கியதும் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் தங்களது செல்போன் வாயிலாக முன்பதிவு செய்து கொண்டனர். முன்பதிவு செய்தவர்கள் மே 1-ந்தேதி அந்தந்த தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி போடக்கூடிய மையங்களுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்காக, அங்கேயே முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்த பணியில், தொய்வோ, குளறுபடியோ ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.

சிக்கல் ஏற்பட்டது

இந்தநிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள நேற்று இணையதளம், மற்றும் செல்போன் செயலியில் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முயன்றதால் சிக்கல் ஏற்பட்டது. இணையதளத்துக்குள் நுழைந்து செல்போன் எண்ணை உள்ளீடு செய்யும் போது ‘ஓ.டி.பி.’ எண் கிடைக்கும். ஆனால் பலர் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து 3 நிமிடம் காத்திருந்தும் ‘ஓ.டி.பி.’ எண் வரவில்லை.

பலருக்கு 3 நிமிடம் கழித்து ‘ஓ.டி.பி.’ எண் செல்போன் நம்பருக்கு வந்தது. 3 நிமிடம் மட்டுமே கால அவகாசம் கொடுப்பதால், அதை பலரால் உள்ளீடு செய்ய முடியவில்லை. இதனால் நேற்று பலர் இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்