6 நாட்களாக பரபரப்பாக காணப்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வெறிச்சோடியது

6 நாட்களாக பரபரப்பாக காணப்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வெறிச்சோடியது முழு ஊரடங்கால் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படவில்லை.

Update: 2021-05-02 21:16 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்படும் நபர்களுக்கு டாக்டர்களால் ‘ரெம்டெசிவிர்’ மருந்து அதிகளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனால் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவியது. மேலும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனை தடுக்கும் விதமாக தமிழக மருத்துவ பணிகள் கழகம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு ’ரெம்டெசிவிர்’ மருந்தை கடந்த மாதம் 26-ந்தேதி முதல் நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை தொடங்கிய நாள் முதலே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால், கடந்த 6 நாட்களாக மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டு வந்த கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி ஆள் அரவமின்று வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து விற்பனை தொடங்கி நாள் முதலே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி வாசலில் காலே முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். ஆனால் நேற்று முழு ஊரடங்கு மற்றும் வாக்கு எண்ணிக்கை என்பதால், ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படவில்லை. இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், மருத்துவம் சார்ந்த பணிகள், மருந்தகங்கள் முழு ஊரடங்கிலும், இயங்க அனுமதிக்கலாம், என அறிவித்த போதிலும், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேற்று நடக்கவில்லை என்றும், நோயாளிகளின் நலன் கருதி ஊரடங்கு நேரத்திலும் மருந்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் அங்கு வந்த சிலர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்