பார்சல்களில் வழங்க பேக்கரிகளுக்கும் அரசு அனுமதி அரசாணை வெளியீடு

பார்சல்களில் வழங்க பேக்கரிகளுக்கும் அரசு அனுமதி அரசாணை வெளியீடு.

Update: 2021-05-04 19:55 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று முன்தினம் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. இதற்கிடையில் தமிழக அரசு இதுதொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் உணவு விடுதிகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மெஸ் ஆகிய இடங்களில் இருந்து உணவு பார்சல்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் அங்கிருந்து காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்களை பெற்றுக்கொள்ளலாம்.

டீக்கடைகள் அனைத்தும் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டல்கள், உணவு விடுதிகள், மெஸ் மற்றும் டீக்கடைகளில் சாப்பிடும் வசதி அனுமதிக்கப்படாது. ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறைகளுக்கு கொண்டுபோய் உணவு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓட்டல்கள் போல, இனிப்பு, காரம் போன்ற தின்பண்டங்களை பார்சல்களில் வழங்க பேக்கரிக்கும், அரசு அனுமதி வழங்கியுள்ளது நினைவூட்டத்தக்கது.

மேலும் செய்திகள்