சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 பேர் பலி

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-04 22:08 GMT
சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் பலருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அந்தந்த தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கையிலும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

3 பேர் பலி

இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து வந்த கொரோனா நோயாளிகள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்சில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் முருகேசன் கூறுகையில்,

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 800 படுக்கைகளும் நிரம்பியுள்ளதால் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா பாதித்தவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம். ஆனாலும் சில தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஆம்புலன்சில் வைத்தே முடிந்த அளவு சிகிச்சை அளித்து வருகிறோம். இருப்பினும் கொரோனா நோயாளிகளின் உயிர் இழப்பு கைமீறி போகிறது என்றார்.

மேலும் செய்திகள்