6 மணி நேரம் மட்டுமே அனுமதி ;தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

டீக்கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை.

Update: 2021-05-05 07:56 GMT
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது.
 
கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அது நாளை அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாளை ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கும்.

டீக்கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை.

அதேநேரத்தில் ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணிவரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் இந்த பகுதிகளில் கடைகள் செயல்படவில்லை.

நாளை முதல் ஊரகப் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை.

நாளை முதல் காலை 6 மணியில் இருந்து பகல் 12 மணிவரை செயல்பட இந்த கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், வாடகை ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்தகங்கள் வழக்கம் போல செயல்படும். மருந்து வாகனங்கள், உணவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பால் வாகனங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்