பயணிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் 100 விமான சேவை மட்டுமே இயக்கம்

பயணிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் 100 உள்நாட்டு விமான சேவை மட்டுமே இயக்கப்படுகின்றன.

Update: 2021-05-06 19:11 GMT
ஆலந்தூர், 

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மேற்கு வங்காள அரசு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் விமான பயணிகள் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ சான்றிதழ்களுடன்தான் வரவேண்டும். மருத்துவ சான்று இல்லாத பயணிகளை மாநிலத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது.

இதையடுத்து சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து தினமும் 9 விமானங்கள் கொல்கத்தாவுக்கு சென்றும், அங்கிருந்து மீண்டும் 9 விமானங்கள் சென்னைக்கும் வந்தன. இன்று முதல் இந்த 18 விமானங்களும் மறு அறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரிக்கு செல்லும் 2 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

100 விமான சேவை

சென்னை விமான நிலையத்தில் தற்போது பயணிகள் வரத்து குறைவாக இருப்பதால் பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய 48 புறப்பாடு விமானங்களும், பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 52 வருகை விமானங்களும் என 100 உள்நாட்டு விமான சேவை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னைக்கு வரும் விமானங்களில் 2,100 பயணிகளும், சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்களில் 2,800 பயணிகளும் என 4,900 பயணிகள் பயணிக்கின்றனா்.

கடந்த வாரம் 168 விமான சேவை இயக்கப்பட்டு, 12 ஆயிரம் பேர் வரை பயணித்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும், இதனால் விமான சேவை குறைந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் வரத்து குறைவால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்