தமிழக அரசின் தலைமைச்செயலாளராக வெ.இறையன்பு நியமனம் ‘தினத்தந்தி’ பவள விழாவில் இலக்கியப் பரிசு பெற்றவர்

தமிழக அரசின் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற்றார். ‘தினத்தந்தி’ பவள விழாவில் இவர் இலக்கியப் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-05-07 23:01 GMT
சென்னை, 

தமிழக அரசின் தலைமைச்செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பதவி வகித்து வந்தார். அவர் கடந்த 3 மாதத்துக்கு மேலாக தலைமைச் செயலாளராக இருந்துவந்த நிலையில், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய தலைமைச்செயலாளராக அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித்துறையின் பொது இயக்குனராக இருந்த வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழ்த்து பெற்றார்

இதுவரை தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இறையன்புவின் சொந்த ஊர் சேலம் ஆகும். வேளாண்மை படிப்பை முடித்த இவர், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்று வருமானவரித் துறை உதவி கமிஷனராக பணியாற்றினார்.

பின்னர் 2-வது முறை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். நாகை மாவட்ட உதவி கலெக்டராக இருந்தபோது, இரவு சோதனை நடத்தி ஆற்றுமணல் கடத்தலை தடுத்து நிறுத்தினார். கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக இருந்தபோது, கடலூர் மத்திய சிறைக்கைதிகளுக்கு பல்வேறு தொழில்திறன் பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்தார். மாநிலத்திலேயே முதல்முறையாக நரிக்குறவர்களுக்கு கோழிப்பண்ணை அமைத்துத் தந்தார். பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தினார்.

தஞ்சையில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக திறம்படச் செயல்பட்டு, மாநாட்டின் வெற்றிக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தார்.

புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை

இறையன்பு, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக இருந்தபோது சிறப்பு இலக்கிய மலரை அறிமுகப்படுத்தினார். செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் அரசு செய்திகளை ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இவர் காஞ்சீபுரம் கலெக்டராக பதவி வகித்தபோது மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு நல்ல திட்டங்களை முன்னெடுத்தார்.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் கூடுதல் செயலாளராக இறையன்பு இருந்த நேரத்தில், உழவர் சந்தைகளை அமைத்தல், கால்நடை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துதல், நுண்கடன் வசதிகளை பலப்படுத்துதல், மினிபஸ் திட்டத்தை வேகப்படுத்துதல் போன்றவற்றில் அவரது பங்கு முக்கியமாக இருந்தது.

செய்தி-சுற்றுலாத்துறை செயலாளராக அவர் பதவி வகித்தபோது, முக்கிய விருந்தினர்களுக்கு சால்வை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்கும் முறையை அறிமுகம் செய்தார்.

புதுமையான திட்டங்கள்

சுற்றுலா-பண்பாட்டுத்துறை செயலர் பதவியில் இருந்தபோது, சுற்றுலாத்துறையின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக பல்வேறு புதுமையான திட்டங்களை இறையன்பு புகுத்தினார். சுற்றுச்சூழல்-வனத்துறை செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலர், அண்ணா மேலாண்மை பயிற்சி மற்றும் இயக்குனரகத்தின் தலைமை இயக்குனர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன முதன்மைச் செயலாளர் போன்ற பதவிகளிலும் சிறப்பாகப் பணியாற்றி அந்தந்த துறைகளில் தனது முத்திரையை பதித்தவர்.

அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் அந்தஸ்தில் சென்னை அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனராக கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி முதல் இறையன்பு பணியாற்றி வருகிறார்.

‘தினத்தந்தி’ பவள விழாவில் பரிசு

இறையன்பு, இலக்கியத்தில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். இவர் பல்வேறு துறைகளில் 154 புத்தகங்களை எழுதியிருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 6-ந்தேதி நடைபெற்ற ‘தினத்தந்தி’ பவள விழாவில், இறையன்பு எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகம் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு விருதும், ரூ.2 லட்சம் பரிசும் பிரதமர் நரேந்திர மோடி கையால் வழங்கப்பட்டன.

இறையன்புவுக்கு ராஜ்யஸ்ரீ என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்