திருப்பூர்: சிகிச்சை பெற ஆம்புலன்சில் காத்திருந்த 3 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற ஆம்புலன்சில் காத்திருந்த கொரோனா நோயாளிகள் மூவர் இன்று உயிரிழந்தனர்.

Update: 2021-05-10 12:13 GMT
திருப்பூர்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 281 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 150 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருப்பவை. இந்த நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள மண்டபம் மற்றும் அவிநாசி தனியார் கல்லூரி பகுதிக்கு சிகிச்சைக்கு அனுப்புகின்றனர்.

இன்று காலை ஒரே நாளில்கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சைக்காக வளாகத்தின் வெளியே காத்திருந்தனர். அப்போது ஆக்சிஜன் வசதியுடன்  கூடிய ஆம்புலன்சில் சிலர் காத்திருந்தனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 55 வயது ஆண், 40 வயதுப் பெண், மற்றொரு நடுத்தர வயது ஆண் என மூன்று பேர்  திடீரென உயிரிழந்தனர்.

இதுகுறித்துத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி கூறியதாவது:-

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அறை நிரம்பிவிட்டது. வரும் நோயாளிகளின் நிலையைப் பொறுத்து, இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கிறோம்.

நோயாளிகள் யாரும் எங்களைத் தொடர்புகொண்டு கேட்காமல் வருவதால், ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று ஆம்புலன்சில் காத்திருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடலில் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன'' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்