மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு: தமிழக முதல்-அமைச்சர் இரங்கல்

கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-05-15 15:57 GMT
சென்னை,

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  இதனால், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல் மந்திரியானார்.

இவரது இளைய சகோதரர் ஆசிம் பானர்ஜி.  இவருக்கு கடந்த ஏப்ரலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதற்காக அவர் கொல்கத்தா நகரில் உள்ள மெடிக்கா சூப்பர்ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து உள்ளார்.  அவருக்கு வயது 62.  இதனை மருத்துவமனையின் தலைவரான டாக்டர் அலோக் ராய் தெரிவித்து உள்ளார்.

அவரது மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  இதேபோன்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி மம்தா பானர்ஜிக்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உங்களுடைய சகோதரரின் திடீர் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.  அவருடைய நினைவுகள் உங்களுடனும் மற்றும் அவரது அன்புக்குரியவர்கள் அனைவருடனும் வாழும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்