லட்சத்தீவு மக்கள் மீது மத்திய அரசு அடக்குமுறை வைகோ கண்டனம்

லட்சத்தீவு மக்கள் மீது மத்திய அரசு அடக்குமுறை வைகோ கண்டனம்.

Update: 2021-05-27 19:11 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்திற்கு மேற்கே அரபிக் கடலில், 32 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்டது லட்சத்தீவு. இங்கு மக்கள் தொகை ஒரு லட்சத்திற்குள்தான். விவசாயம் செய்யும் நிலப்பரப்பு இல்லை என்பதால், மீன்பிடித்தலும், தேங்காய் வணிகமும்தான் முதன்மையான தொழில். லட்சத்தீவு மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாகும். ஆனால், துணைநிலை கவர்னர் கிடையாது. தலைமைப் பொறுப்பில் பிரபுல் கோடா பட்டேல் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

பவழப் பாறைகளையும், இயற்கையின் பேரழகையும் கொண்ட லட்சத்தீவின் கடற்கரையையும், நிலப்பரப்பையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்க பிரபுல் கோடா படேல் பணியாற்றி வருகிறார். அத்துடன், நீண்ட நெடுங்காலமாக, லட்சத்தீவு மக்கள் தங்களது வணிகம் நடவடிக்கைகளை, கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகம் வழியாகவே செய்து வருகின்றனர்; இனி, கர்நாடகத்தின் மங்களூரு துறைமுகம் வழியேதான் நடக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுள்ளார். லட்சத்தீவு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் நடவடிக்கைக்கு கேரள மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. லட்சத் தீவில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் அடக்குமுறையை கண்டிப்பதுடன், பிரபுல் கோடா படேலை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ஜனாதிபதியையும் வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்