ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் கைது தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளால் தேடப்பட்டவர்

மயிலாடுதுறை அருகே தலைமறைவாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். கைதானவர், தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

Update: 2021-05-28 22:00 GMT
மயிலாடுதுறை,

சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைமையை ஏற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த சிலர் செயல்பட தொடங்கியுள்ளதாக உளவுத்துறைக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட 7 பேரை தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்தனர். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டதாக கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

பிடிவாரண்டு

இதுதொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த கோவையை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால், முகமது ஆசிக் மீது சென்னை பூந்தமல்லி கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

கைது

இதனையடுத்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் முகமது ஆசிக்கை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் முகமது ஆசிக் மயிலாடுதுறை அருகே நீடூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை வந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை மாவட்ட அதிரடிப்படை போலீசார் உதவியுடன் நீடூருக்கு சென்று முகமது ஆசிக்கை நள்ளிரவில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முகமது ஆசிக் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடூரில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட முகமது ஆசிக்கை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்