திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த புகார் குறித்து விசாரணை

திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகார் மனு மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ஜெயலட்சுமி விசாரணை நடத்த உள்ளார்.

Update: 2021-05-29 21:16 GMT

நடிகை புகார்

திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி இயக்கிய ‘நாடோடிகள்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் இவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் மனு அளித்தார்.அதில், ‘நானும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போன்று ஒன்றாக வாழ்ந்து வந்தோம். நான் 3 முறை கர்ப்பம் தரித்து, கருவை கலைத்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து இருந்தார். தற்போது என்னை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு தெரியாமல் ஆபாச புகைப்படங்களை எடுத்து வைத்திருக்கிறார். அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் மிரட்டுகிறார்’ என்று கூறியிருந்தார்.

மணிகண்டன் மறுப்பு

மணிகண்டனுடன் தான் நெருங்கி இருக்கும் புகைப்படத்தையும், அவருடனான ‘வாட்ஸ்-அப்’ உரையாடல் விவரங்களையும் நடிகை சாந்தினி புகார் மனுவோடு இணைத்து வழங்கி இருந்தார். ஆனால் தன் மீதான இந்த புகாரை மணிகண்டன் மறுத்துள்ளார். நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது. பணம் பறிக்க பொய்யான புகார் கொடுத்து உள்ளதாகவும், இதனை நான் சட்டப்படி சந்திப்பேன் என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

போலீஸ் கமிஷனர் உத்தரவு

இந்தநிலையில் நடிகை சாந்தினி அளித்த புகார் மனு மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ஜெயலட்சுமி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் மனு குறித்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

புகார் அளித்த நடிகை சாந்தினிக்கும், குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் சம்மன் அனுப்பி விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகள்