மேற்கு மண்டலத்தில் அதிக கவனம் தேவை: கொரோனா தொற்றின் வேகத்துக்கு ஏற்ப அரசின் செயல்பாடு இருக்கவேண்டும்; ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கொரோனா நோய்த்தொற்றின் வேகத்துக்கு ஏற்ப அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றும், மேற்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-05-29 22:14 GMT
அதிக கவனம் செலுத்த வேண்டும்

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே ஒரு பதற்றத்தை தோற்றுவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 20 சதவீதம் என்ற நிலையில் உள்ளது என்று பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.ஆனால் மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கும் மேலாக உள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 35 சதவீதத்தினர் 
மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் செய்தி வெளிவந்துள்ளது. கடந்த 28-ந்தேதி நிலவரப்படி மேற்கு மண்டலத்தில் மட்டும் 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை நான் இங்கு சுட்டிக்காட்டுவதற்கு காரணம், மேற்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தான்.

படுக்கைகள் கிடைப்பதில் தாமதம்
உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், அவசர சிகிச்சைப்பிரிவில் படுக்கைகள் கிடைப்பதில் உள்ள காலதாமதம் ஆகியவையே. கடந்த சில நாட்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருந்தாலும், புதிதாக பாதிப்போர் தினமும் ஆஸ்பத்திரிகளை நாடி வருவதால் படுக்கைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதே சமயத்தில் காத்திருக்கும் நேரம் சற்று குறைந்திருப்பதாகவும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் குறிப்பிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.சென்னை 
ஆஸ்பத்திரியிலேயே இந்த நிலைமை என்றால், ஊரகப்பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளின் நிலைமையை நினைத்து பார்க்கவே முடியாது. எனவே உயிரிழப்புகளை உடனடியாக தடுக்கும் வகையில், நோய்த்தொற்றின் வேகத்துக்கு ஏற்ப அரசின் செயல்பாடு இருக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்