தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என்று கூறியதால் பருப்பு டெண்டர் அறிவிப்பை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என்று கூறியதால், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-01 00:08 GMT
சென்னை,

பொது வினியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த ஏப்ரல் 26-ந்தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பில், கடந்த கால டெண்டர் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் கடைசி 3 ஆண்டுகளில் ரூ.21 கோடி விற்றுமுதல் கொண்டிருக்க வேண்டும் என்றும் கடந்த முறை அறிவித்தது. ஆனால் இம்முறை அந்த தொகையை வெறும் ரூ.11 கோடியாக குறைந்துள்ளது. சட்டப்படி வழங்கவேண்டிய கால அவகாசத்தை வழங்கவில்லை. எனவே, இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மணிகண்டன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, தமிழக அரசின் டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல இந்த டெண்டர் அறிவிப்பை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மணிகண்டன் உள்ளிட்டோர் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை. வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் மனுதாரர் தரப்பு வக்கீல்கள் வாதத்தை பதிவு செய்துகொண்டு, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்