‘டவ் தே' புயலில் காணாமல் போன 21 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘டவ் தே' புயலில் காணாமல் போன 21 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவியாக வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-02 22:59 GMT
சென்னை,

கடந்த மாதம் 13-ந்தேதி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டவ் தே புயல் குறித்து வெளியிட்ட எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதன்காரணமாக, அரபிக்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 246 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பின.

இருப்பினும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு, லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியதாகவும் அதில் இருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் என மொத்தம் 9 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் கிடைத்தது.

தேடுதல் பணி தீவிரம்

அதேபோன்று, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சபிஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாயமானதாகவும் தெரியவந்தது.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படையின் அதிநவீன கப்பல் மற்றும ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தலா ரூ.20 லட்சம் நிவாரணம்

இருந்தபோதிலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

காணாமல் போன 21 மீனவர் குடும்பங்களின் வறுமை நிலையினை கருத்தில் கொண்டு அவர்களது வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்