நலவாரிய அடையாள அட்டையுடன் வரும் திருநங்கைகளுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்

நலவாரிய அடையாள அட்டையுடன் வரும் திருநங்கைகளுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் அரசாணை வெளியீடு.

Update: 2021-06-03 20:06 GMT
சென்னை,

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

3-ம் பாலினர் (திருநங்கைகள்) நலவாரியம் மூலம் மாவட்ட வாரியாக அவர்களை பற்றிய கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 11 ஆயிரத்து 44 மூன்றாம் பாலினர் கண்டறியப்பட்டு, அவர்களில் 6,248 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

அவர்களுக்கு கொரோனா நிவாரண தொகை, 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், சொந்தத் தொழில் செய்ய வாரியத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து மகளிருக்கும் வழங்கப்பட்டுள்ளதைப் போல, 3-ம் பாலினரும் தங்களின் சமூக பொருளாதார தேவைகளுக்காக வெளியே செல்லும்போது அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினரும் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண டவுன் பஸ்களில் (ஒயிட் போர்டு) இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்