சென்னையில் கூடுதலாக 7 ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க இரு மின்வழித்தட வசதி அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னையில் கூடுதலாக 7 ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-06-03 23:10 GMT
சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நலத்தினை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் ஆணைப்படி சென்னையில் கூடுதலாக 7 ஆஸ்பத்திரிகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ளது போல இரு மின்வழித்தட வசதிக்கான தொடர் மின் சுற்று கருவி மேலும் 7 ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

7 ஆஸ்பத்திரிகள்

குறிப்பாக, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையம், எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, கொளத்தூர், பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரி, சேப்பாக்கம் கஸ்தூரிபாய் காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட், தாம்பரம் சானிடோரியம் டி.பி. ஆஸ்பத்திரி, கே.கே.நகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஆகியவற்றில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி அமைக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் மூலம் இந்த ஆஸ்பத்திரிகளில் தலா இரு மின்வழித்தடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்வழித்தடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதிகபட்சமாக மூன்று விநாடிகளிலேயே தானாகவே தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் கருவியின் மூலம் மற்றொரு மின்வழித்தடத்தின் வாயிலாக மின்சாரமானது தொடர்ச்சியாக இந்த மருத்துவமனைகளில் வழங்கப்படும். இதன் மூலம் எவ்வித அசாதாரண சூழலிலும் தங்குதடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்கும். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள்

முதல்-அமைச்சரின் ஆணையின்படி ஆக்சிஜன் உற்பத்தி செய்ய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாகவும், தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்