கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Update: 2021-06-07 19:54 GMT
கொடைக்கானல்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில், கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் பெற்று பொதுமக்கள் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் இ-பாஸ் பெற்று வரும் வாகனங்கள் குறித்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக கொடைக்கானல் எல்லைகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, பழனி மலைப்பாதை, பெருமாள் மலைப்பகுதி ஆகிய இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று கொடைக்கானல் நகருக்கு வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அதில், இ-பாஸ் பெற்று வந்த வாகனங்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னதாக இ-பாஸ் எடுத்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் கூறுகையில், இ-பாஸ் முறை அமலுக்கு வந்துள்ளதால் கொடைக்கானல் எல்லைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த குழுவினர் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இ-பாஸ் பெற்று வருபவர்கள் மட்டுமே கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்றைய தினத்தில் (நேற்று) மிகவும் குறைவான வாகனங்களே வந்தன. அதிலும் இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன என்றார்.

இதேபோல் கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்