கொரோனா தடுப்பிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு விலை நிர்ணயம் தமிழக அரசு உத்தரவு

கொரோனா தடுப்பிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-08 21:13 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. எனவே மக்களுக்கு தினமும் கொரோனா பரவல் தடுப்புக்கான முககவசம், சானிடைசர் போன்ற பொருட்கள் கட்டாயம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஊரடங்கு உத்தரவினால் ஏற்கனவே குடும்ப வருமானம் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், கொரோனா தடுப்பு பொருட்களை சாதாரண மக்களும் வாங்கியாக வேண்டும்.

விலை நிர்ணயம்

எனவே கொரோனா பரவல் கட்டுப்பாடு தொடர்பான சில பொருட்களை, தமிழ்நாடு அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடு மற்றும் வேண்டுகோள் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் என்று அறிவித்து, அந்தப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

என்ன விலை?

இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் இதில் கூறப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில்தான் விற்பனை செய்ய வேண்டும். அதன்படி,

கை சானிடைசர் (200 மி.லி.) - ரூ.110 (வேறு அளவிலான சானிடைசரின் விலையும் இந்த விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்); என்.95 முககவசம் (மாஸ்க்) - ரூ.22; சர்ஜிக்கல் முகககவசம் 2 - ரூ.3; சர்ஜிக்கல் முககவசம் 3- ரூ.4;

சர்ஜிக்கல் முககவசம் (பாபிரிக்) 3 - ரூ.4.50; பிபிஇ கிட் - ரூ.273; டிஸ்போசபிள் அப்ரோன் - ரூ.12; சர்ஜிக்கல் கவுண் - ரூ.65; ஸ்டெரைல் கிளவுஸ் - ரூ.15; எக்சாமினேசன் கிளவுஸ் - ரூ.5.75; நான்-ரீபிரித்தர் மாஸ்க் - ரூ.80; ஆக்சிஜன் மாஸ்க் - ரூ.54;

புளோ மீட்டர் வித் ஹுமிடிபையர் - ரூ.1,520; பிங்கர்டிப் பல்ஸ் ஆக்சிமீட்டர் - ரூ.1,500; முக ஷீல்ட் - ரூ.21.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்