தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும், படிப்படியாக இந்த மாதத்துக்குள் தடுப்பூசிகள் வரும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-08 22:50 GMT
சென்னை,

சென்னை கிண்டி கிங் அரசு கொரோனா ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைய இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்து, நிலம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

அந்தவகையில் 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 8.6 ஏக்கர் பரப்பளவில் ஆஸ்பத்திரி உள்ளது. 12.6 ஏக்கர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக இருக்கிறது. மொத்தமாக 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில், 12 துறைகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி நிலையம் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தடுப்பூசி இல்லை

தற்போது, இங்கு 650 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது தடுப்பூசி இல்லை என்பது உண்மைதான். தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம் அளவுக்கு தடுப்பூசி வந்துள்ளது.

97 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து இந்த மாதத்துக்குள் 42 லட்சம் தடுப்பூசிகள் வரும். அதன்படி ஏற்கனவே 5½ லட்சம் தடுப்பூசிகள் வந்துவிட்டது. இன்னும் 36½ லட்சம் தடுப்பூசிகள் படிப்படியாக வரும் என எதிர்பார்க்கிறோம்.

குன்னூர் தடுப்பூசி தயாரிப்பு மையம்

18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்காக தடுப்பூசிகளை பெறுவதற்கு ரூ.99.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இன்னும் 17 லட்சம் தடுப்பூசிகள் வர இருக்கிறது. குன்னூரில் உள்ள தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்தோம்.

குன்னூரிலும் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் பொதுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய அளவிலான தளர்வுகளை பெரிய அளவிலான தளர்வுகளாக கருதி வெளியே வர தொடங்கி இருக்கின்றனர். எனவே தேவையில்லாமல் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு வசதிகள் தொடக்கம்

இதையடுத்து ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வசதிகளை தொடங்கி வைத்து, ஒப்பந்த டாக்டர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அடையாறு ஆனந்த பவன் 60 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை வழங்கி உள்ளது. தமிழக அரசு சார்பில் 2 ஆயிரம் டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 1,485 டாக்டர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.

கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் 3,060 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

35 ஆயிரம் மருந்துகள் தேவை

35 ஆயிரம் மருந்துகள் தேவை இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். வந்திருக்கக்கூடிய 3,060 மருந்துகள் நோயின் தன்மைக்கு ஏற்ப வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 150 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்