கொரோனா தடுப்பு பணிக்காக உயர் அதிகாரிகள் விமான பயணத்துக்கு அனுமதி

கொரோனா தடுப்பு பணிக்காக உயர் அதிகாரிகளின் விமான பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-08 23:23 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசுக்கான பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும், நிதி ஆதாரத்தை ஏற்படுத்தவும், செலவை ஏற்படுத்தும் சிலவற்றை தவிர்ப்பதற்கான உத்தரவை 2020-ம் ஆண்டு மே 21-ந்தேதி அரசு பிறப்பித்தது.அதில் ஒன்றாக, மாநிலத்திற்குள் அதிகாரிகள் மேற்கொள்ளும் விமான பயணமும் சேர்க்கப்பட்டது.

மாநிலத்திற்குள் அரசு அதிகாரி மேற்கொள்ளும் விமான பயணத்திற்கான செலவு, அதே இடத்திற்கு ரெயில் மூலம் செல்லும் பயண செலவைவிட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் மட்டுமே விமான பயணம் அனுமதிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசுக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் கடிதம் எழுதினார். அதில், கொரோனா தடுப்புப் பணிகள் நிமித்தம் ஆய்வு நடத்துவதற்காகவும், களப்பணியாற்றவும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் உள்பட துறைத்தலைவர்கள் பலரும் அடிக்கடி மாநிலத்திற்குள்ளேயும், வெளியேயும் சென்றுவிட்டு உடனடியாக தலைமையகம் திரும்ப வேண்டியதுள்ளது.

எனவே மாநிலத்திற்குள்ளும், வெளியேயும் சென்றுவர விமானப் பயணத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்தது.

அதன்படி, சுகாதாரத்துறையின் அனைத்து துறை தலைவர்களும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக மாநிலத்திற்குள்ளும், வெளியேயும் விமான பயணம் செய்ய அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்