“மாவட்ட ஆய்வு பணிகளின் போது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம்” - தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள்

மாவட்டங்களுக்கு ஆய்வு பணிக்காக வரும் போது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம் என தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-06-10 08:52 GMT
சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., கடந்த காலங்களில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஆவார். தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அவர் வெளியிட்டு வரும் சுற்றறிக்கைகள், பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெறும் வகையில் அமைந்துள்ளன. 

பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றிய போது, ‘உன்னை அறிந்தால்’, ‘நினைவில் நின்றவை’, ’இலக்கியத்தில் விருந்தோம்பல்’ உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ள இறையன்பு, தலைமைச் செயலாளராக பொறுபேற்ற பின்னர், அரசு விழாக்களில் தனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மாவட்டங்களில் ஆய்வு பணிக்காக வரும் போது ஆடம்பர ஏற்படுகள் எதுவும் வேண்டாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

காலை மற்றும் இரவு நேரங்களில் எளிமையான உணவு வழங்கினால் போதும் எனவும், மதியம், இரண்டு காய்கறிகளுடன் சைவ உணவு போதும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஆடம்பர ஏற்பாடுகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்