பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் விலை உயர்வு: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்கும் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் விலை உயர்ந்துள்ளது என்றும், தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-11 22:09 GMT
சென்னை,

பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவதையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. சென்னை நேரு பூங்கா அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தவறான ஆட்சி முறை

நாட்டில், வரலாறு காணாத வகையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கைதான். மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலருக்கு விற்பனையானது. ஆனால் அப்போது அவர் ரூ.70-க்கு பெட்ரோலை விற்றார்.

ஆனால் இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் தான். ஆனால் மோடி ரூ.100-க்கு பெட்ரோலை விற்கிறார். இதுதான் காங்கிரசுக்கும், பா.ஜ.க. வுக்கும் இருக்கிற வித்தியாசம். மன்மோகன்சிங் அரசாங்கம் மக்களை மையப்படுத்திய அரசாங்கமாக இருந்தது. மோடியின் அரசாங்கம் மக்களிடம் இருந்து விலகி இருக்கிறது.

கடந்த 6 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடிக்கு கலால் வரியை மோடி உயர்த்தி உள்ளார். பெட்ரோல்-டீசல் விலையேற்றத்துக்கு அது ஒரு காரணம். பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.32. அதே நேரத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி 32 ரூபாய். அதாவது 50 சதவீதம் வரி உயர்வை மோடி கொண்டு வந்துள்ளார். இது தவறான ஆட்சி முறை.

பச்சிளம் குழந்தை நிலை

தி.மு.க அரசு பொறுப்பேற்று பச்சிளம் குழந்தை நிலையில் இருக்கிறது. அவர்கள் இதுநாள் வரை தொற்றுக்கு எதிராகதான் செயல்படுகிறார்களே தவிர, சீர்த்திருத்தங்களுக்காகவோ, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கோ அல்லது சமூகத்தில் உள்ள மற்ற பிரச்சினைகளை பார்ப்பதற்கோ நேரம் கிடைக்கவில்லை. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் வரியை குறைக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயமாக பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி சுதா, விஜய் வசந்த் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் அகரம் கோபி, அகமது அலி, மயிலை தரணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்