போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் செயல்படும் - போலீஸ் கமிஷனர் பேட்டி

சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Update: 2021-06-13 22:53 GMT
சென்னை,

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னையில் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் போது போலீஸ் உதவியை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து, நேற்று மாலை டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பெரியமேடு, எழும்பூர், ஐஸ்அவுஸ் ஆகிய இடங்களில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மது வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும். முக முகவசம் அணியாமல் வருபவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட மாட்டாது. மதுக்கடைகள் முன்பும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் உதவி செய்வார்கள். கடைகள் முன்பு தடுப்பு வேலிகள் போடப்படும். போதிய இடைவெளி விட்டு வட்டம் போடப்படும். அந்த வட்டத்திற்குள் நின்று வரிசையாக சென்றுதான் மது வாங்க முடியும். கூட்டம் அதிகமாக இருந்தால் சாமியானா பந்தல் போடப்பட்டு அதில் மதுவாங்க வருபவர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.

கூட்டம் சேர்க்காமல் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் வாங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது-

டாஸ்மாக் கடைக்குள் இருக்கும் ஊழியர்கள் முககவசம் அணிந்திருப்பார்கள். கைகளில் உறையும் போட்டிருப்பார்கள். வாடிக்கையாளர்களை காத்திருக்க விடாமல் விரைவாக விற்னை செய்ய ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 2 ஊழியர்கள் கடைக்கு வெளியில் நின்று கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசாருக்கு உதவி செய்வார்கள்.

தடை உள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்குள் சென்று மதுபாட்டில் வாங்க கட்டுப்பாடு ஏதும் இல்லை. இதை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்து வீடுகளுக்கு சென்று மதுபாட்டில்கள் வினியோகிப்பது குறித்து அரசுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்