கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வழங்கும் திட்டம்; மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரண வைப்புத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2021-06-15 21:03 GMT
வைப்பீடு வழங்கும் திட்டம்
கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒருவரையோ இழந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வைப்பீட்டுத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த மே 29-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இதில் பயனாளிகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறையும் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்பட்டு, 18 வயது நிறைவடையும்போது அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். அந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம் வழங்கப்படும். பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் உள்பட பல நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இன்று தொடக்கம்
கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணத்தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் பயனாளிகளை அரசு தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தை இன்று (புதன்கிழமை) தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்தை குழந்தைகளில் ஒரு சிலருக்கு வைப்புத்தொகையை வழங்கி திட்டத்தை அவர் தொடங்கி வைப்பார்.

மேலும் செய்திகள்