விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க சிறப்பு பணிக்குழு அமைப்பு - தமிழக அரசு உத்தரவு

விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்கவும், குறைக்கவும் சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-18 12:39 GMT
சென்னை,

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக கடந்த 3-ந்தேதி கண்டறியப்பட்டது. இதில் நீலா என்ற 9 வயதுள்ள பெண் சிங்கம் உயிரிழந்தது. அதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்மநாபன் என்ற 12 வயதுள்ள ஆண் சிங்கம் உயிரிழந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிங்கம் உயிரிழந்ததாகவும், மேலும் கவிதா, புவனா என்ற 2 பெண் சிங்கங்கள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ள சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் உதவியுடன் ஆன்டிபயாடிக் (நுண்ணுயிரி எதிர்ப்பு) மற்றும் பிற நோய்த்தடுப்பு மருந்துகள் தரப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழக அர்சு சார்பில், வனவிலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை முதன்மைச் செயலர் தலைமையில், வன ஆர்வலர், ஓய்வு வனப்பணி அதிகாரி (ஐ.எஃப்.எஸ்.), வனப் பாதுகாவலர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட மாநில அளவிலான பணிக்குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்கவும், குறைக்கவும் மற்றும் மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும், தமிழக அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்), முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சிறப்புச் செயலாளர் (வனம்), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத்துறை, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர், மேம்படுத்தப்பட்ட வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம், இந்திய வனப்பணி ஓய்வு அதிகாரி சுந்தரராஜூ, முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் மற்றும் தியடோர் பாஸ்கரன், வனவிலங்குப் பாதுகாவலர் ஆகியோரை உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான பணிக்குழு (State Level Task Force) ஒன்றினை அமைத்துள்ளது.

இப்பணிக்குழு நோயின் பரவலைக் கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் மற்றும் தொடர்புடைய துறைகளின் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து தொடர் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.”

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்