கவர்னர் உரை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

தமிழக சட்டசபையில் கவர்னர் நிகழ்த்திய உரை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-21 20:07 GMT
 சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- கவர்னர் உரையை தமிழக அரசின் கொள்கை விளக்க உரையாகத் தான் கருதவேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப்பாதையில் பயணிக்கப்போகிறது என்பதை கவர்னர் உரையில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை கவர்னர் உரை ஏற்படுத்தி இருக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- கவர்னர் உரையில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தக்கூடிய மாநில சுயாட்சி கோட்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன்:- 10 ஆண்டு காலம் சரிந்து வீழ்ந்து கிடந்த தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தை அரசின் உறுதியான கொள்கையாக கவர்னர் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த்:- கவர்னர் உரையில் இடம்பெற்ற சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. எனவே கவர்னர் உரை ஏற்பும், ஏமாற்றமும் கலந்த உரையாக உள்ளது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் ஆட்சி கொள்கைகள் அறிவிப்பு பிரகடனம்போல் கவர்னர் உரை என்ற தலைப்பில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- தி.மு.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பு ஏற்று சட்டமன்றத்தில் கவர்னர் நிகழ்த்திய உரை, இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:- நீட் தேர்வை ரத்து செய்வதை பற்றியோ, பெட்ரோல், டீசல் வரி குறைப்பு பற்றியோ எதுவும் குறிப்பிடாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

டி.டி.வி.தினகரன்

இதேபோல அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில இணை செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் (தமிழ்நாடு) எம்.முகமது சேக் அன்சாரி ஆகியோரும் கவர்னர் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்