மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.

Update: 2021-06-22 22:47 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்திற்கு பெரும் நீர் ஆதாரத்தை தரக்கூடிய காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முடிவில் உறுதியாக இருப்பதாக கர்நாடக அரசு அறிவித்து அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் சட்டசபை கூட்டத்தில் வெளியான கவர்னர் அறிக்கையில் மேகதாது அணையை தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்படும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல், வெறுமனே மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று மட்டும் பொத்தாம் பொதுவாகக் கூறியிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

கர்நாடக அரசின் சூழ்ச்சியாலும், மத்தியில் ஆளும் அரசுகளின் பாராமுகத்தாலும் காவிரி நதிநீர் உரிமையில் பெருமளவு இழப்பை சந்தித்திருக்கும் வேளையில், மேகதாதுவில் அணையும் கட்டப்பட்டுவிட்டால் தமிழகத்திற்கு முழுவதுமாக காவிரி நதிநீர் மறுக்கப்படும் பேராபத்து நிகழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்து வைக்கும் வலுவான வாதங்களின் மூலம்தான் தமிழக காவிரிப்படுகை விவசாயிகளின் எதிர்காலமே பாதுகாக்கப்படும். இந்த வழக்கில் தமிழக அரசு கவனமாக செயல்பட்டு மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்