தேனி, திண்டுக்கல், உள்பட 5 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-23 08:45 GMT
சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தாலும், வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் (புதன்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை ,திருப்பூர், தேனி ,திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

27ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் ஒரு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 இன்று முதல் வருகிற 27-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்